Sunday 16 August 2009

ஜென் என்றால் என்ன???


ஜென் என்கிற சொல், சம்ஸ்கிருத சொல்லாகிய தியான் என்கிற சொல்லில் இருந்து வருகிறது.

கெளதமபுத்தர் தியானம் சொல்லித்தந்தார்.போதிதர்மா சீன நாட்டுக்கு தியானத்தை சொண்டு சேர்த்தார்.அது அங்கே சீயான் என்று ஆனது.

இந்த சீயான் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்ற போது ஜென் என்று ஆனது.
ஜென் என்பது வேதங்கள் இல்லாத, விதிமுறைகள் இல்லாத,குறிப்பிட்ட பயிற்சிகள் இல்லாத ஒரு தன்மை. அது வரையறுக்கப்படாத பாதை. அது யோகாவிலிருந்து வேறுபட்டதல்ல அது தான் யோகா.ஜென் மார்க்கத்தில் ஹீயூட்டி என்று ஒருவர் இருந்தார். அவர் யாருக்கும் ஜென் போதித்ததில்லை .ஆனால் குருமாராக அறியப்பட்டார். எல்லோரும் அவரை குரு என்று மதித்தார்கள்.

ஆனால் அவர் எந்த போதனைகளையும் தந்ததில்லை. தோள்களில் ஒரு பெரிய பையை அவர் சுமந்து கொண்டு செல்வார்.அதில் பெரும்பான்மையானவை இனிப்புகளாக இருக்கும்.
அவர் போகிற ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் அவரை சூழ்ந்து கொள்ளுவர். அவர் இனிப்புகளை வினியோகிப்பார் பிறகு சென்றுவிடுவார். அவ்வளவு தான் .

மக்கள் அவரிடம் வந்து போத்னைகளை கேட்பார்கள். அவர் சிரித்து விட்டு சென்று விடுவார்....

இன்னொரு குரு என்பனின் என்பவர் மிகவும் புகழ்பெற்றவர். அவர் ஹீயூட்டியை சந்திக்க வருகிறார். அவர் ஹீயூட்டி உண்மையாகவே ஜென் மார்க்கத்தில் இருக்கிறாரா??? இல்லையா ?? என்பதை தெரிந்து கொள்ள வந்தார்.

அவரிடம் ஜென் என்றால் என்ன??? என்றார். உடனே ஹீயூட்டி கையிலிருந்த சாக்கை நழுவவிட்டு நேராக நின்றார். அவர் அடுத்து ஜென்னின் நோக்கம் என்னவென்றார்??? ஹீயூட்டி அந்த சாக்கை எடுத்து தன் தோள்களில் போட்டுக்கொண்டு நகர்ந்து விட்டார்.

இது தான் யோகா என்பது
எனவே நீங்கள் யோகாவையோ ஜென்னையோ அடைய வேண்டும் என்று விரும்பினால் உங்களிடம் இருக்கிற சுமையை கீழே போட்டு விட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுதந்திரமாக நேராக நிற்கவேண்டும். இது தான் முக்கியம்.சில சமயம் சுமையோடும் அதை செய்ய முடியும். அது மிக மிக அரிது . லட்சத்தில் ஒருவரால் அது முடியும். எனவே சுமையை கீழே போடுங்கள்.

Tuesday 11 August 2009

காதல் குறள்!!!!


யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்

நான் அவளை பார்க்கும்போது, நாணி தலைகுனிந்து நிலத்தை நோக்குவாள். நான் அவளை பார்க்காத சமயத்தில், என்னை பார்த்து மெல்ல புன்முறுவல் செய்வாள்......

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைகொண் டன்னது உடைத்து

நான் பார்தேன் அவளும் எதிர் நோக்கினாள்.அந்த பார்வை தானே துன்புறுத்தவல்ல மோகினி, ஒரு சேனையும் உடன் அழைத்து கொண்டு வந்து தாக்கியதை போலிருந்தது ......

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்

காதலர் இருவருள் ஊடலில் தோற்றுப்போனவர் தான் வென்றார். அது அப்போது அறியப்படாது போனாலும் பின்னர் சேரும்போது தெரியும்.....

ஒரு தலையின் இன்னாது காமம்காய் போல
இருதலை யானும் இனிது

தலைவன் தலைவி இருவருள் ஒருவரின் அன்பினால் மட்டுமே உண்டாகிய காதல் துன்பமயமானது. காவடியின் பாரம் போல் இருபக்கமும் ஒத்த அன்பினால் உண்டாகிய காதலே இனிமையானது......

நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டால்
அஞ்சுதம் வேபாக்கு அறிந்து

என் காதலர் எப்போதும் என் நெஞ்சில் நீங்காது உறைவதால் அவர் மேனி வெந்து விடுமோ என்று சூடானவற்றை சாப்பிடக்கூட அஞ்சுகிறேன்.....

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறை இறவா நின்ற வளை

தலைவனுடைய பிரிவினால் ஏற்பட்ட மெலிவால் என்முன் கையில் இருந்த வளையல்கள் கழன்று வீழ்ந்து விடுவதால், அவர் என்னை பிரிந்த்தை பலரும் அறிந்து என்னை தூற்றாமல் இருப்பார்களோ????

தம்நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்

தன் நெஞ்சம் என்னை வரவிடாமல் தடுத்து காவல் இருக்கும் அவர் என் நெஞ்சத்தில் மட்டும் ஒழியாமல் வருவதற்கு வெட்கப்படமாட்டாரோ???

இம்மை பிறப்பில் பிரியலாம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்

இப்பிறப்பில் உன்னை பிரியமாட்டேன் என்று சொன்னபோது, அப்படியானால் இனிவரும் பிறவியில் மறந்து விடுவேனோ என்று தவறாக உணர்ந்து, மறுமை பிரிவுக்கு அஞ்சிக் கண்களில் நீர்வடிய நீர் நிறைத்து நின்றாள்......

Thursday 6 August 2009

பயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்


”பயமெனும் பேய்தனை அடித்தோம்
பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
என்று வீர முழக்கமிடுகிறார் பாரதி

பயம் சில குடும்பங்களில் தாய் தரும் நோய் என்று சில மன நூலார் கூறுகின்றனர்.

இருட்டில் போகாதே அதைச்செய்யாதே இதைத் தொடாதே என எதற்கெடுத்தாலும் பயந்து தன் குழந்தைக்கு பாலுடன் பயத்தையும் ஊட்டுகிறாள் என்கிறார்கள்.

பணிந்துபோவது நல்லது தான்.
ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு.
இப்பொழுது நாம்
அதிகாரத்தை கண்டு அஞ்சுகிறோம்,
ஆணவத்திற்கு தலை பணிகிறோம்.
மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கவும் தயங்குகின்றனர் படித்தவர்கள். பயம் பல நிலைகளில் மக்களிடம் காணப்படுகின்றது.


நமது பணிவு என்ற பண்பு, மறுகோடிக்குச் சென்று மனிதனைக் கோழையாய்,பேடியாய் மாற்றிவிட்டிருப்பதைக் காண முடிகின்றது.பாரதியும் அதை தான் கூறினார். நம்மிடை நைச்சிய மனோபாவம் மிகுந்திருப்பதாக, அடிமைப் புத்தி மலிந்திருப்பதாக.

தன்னம்பிக்கை இழந்து விட்ட ஒரு சமுதாயத்தை, தன்னை தாழ்த்திக் கொண்டு வாழும் ஒரு மக்கள் கூட்டத்தை ,பிறரை இரந்து வாழும் ஒரு மன நிலையை கொண்ட ஒரு மக்கள் சமூகததை நாம் இன்று கொண்டு உள்ளோம்.இந்த நிலை மாற வேண்டும்.

நம்மால் முடியமா??? என்ற சந்தேகம்
நம்மால் முடியாது என்ற
நம்பிக்கையாய் ஊறி
நமது தாழ்வு மனப்பான்மையாய் வெளிவருகின்றது.
நமக்கேற்படும் பயத்தினால்,
நாம் பிறரை சார்ந்து நிற்க விரும்புகின்றோம்.
பிறரிடம் நமது பொறுப்புகளை ஒப்புவிப்பதன் மூலம்
நமது பிரச்னைகளிலிருந்து அவற்றை சமாளிப்பதிலிருந்து தப்பிக்க பார்க்கின்றோம்


கடல் பூராவும் தண்ணீர் இருந்தாலும், கடல் நீர் கப்பலுக்குள் புகாதவரை, கப்பல் அமிழ்ந்து போவது இல்லை. அதேபோல தான் பயமும்.மனம் என்ற கப்பலுக்குள் சஞ்சலம்,பயம்,திகில்,பீதி,சந்தேகம் என்ற ஓட்டைகள் ஏற்படாதவரை இந்த உலகப் பிரச்னைகளும் நம்மை அசைக்க முடியாது.

Monday 3 August 2009

தேடல்.....


சங்கரன் பிள்ளை ஒரு முறை சந்நியாசம் மேற்கொண்டு ஆன்மீகப்பாதையில் போக விரும்பினார்.

அந்த காலத்தில் மிகவும் புகழ்பெற்ற முறையாக ,கோரக்நாத் முறையிருந்தது.எனவே கோரக்நாத் முறையை சேர்ந்தவர்களிடம் சென்று
சந்நியாசம் கேட்டார் சங்கரன் பிள்ளை. அவர்கள் ஒப்புக்கொண்டு அவர் தலையை மொட்டையடித்தார்கள்.

பொதுவாகவே கோரக்நாத் வகையை சேர்ந்தவர்கள் தங்கள் காதுகளில் கண்ணாடி அல்லது தந்தத்தால் ஆன ஒரு வளையலை அணிந்திருப்பார்கள்.எனவே சங்கரன் பிள்ளை காதில் ஒரு பெரிய ஓட்டையை போட்டு,வளையலை மாட்டி மொட்டையடித்து,காவி நிற ஆடையை அணிவித்தார்கள்.அங்கே ஒரு மாதமிருந்தார்.அவருக்கு மன நிறைவு கிடைக்கவில்லை.எனவே மறு படியும் தேடுதலை தொடங்கினார்.

அவர் மிகவும் தீவிரமாக தேடிக்கொண்டிருந்த போது, ஒரு காட்டுக்குள் போனார். அங்கே ஒரு இஸ்லாமியத் துறவியை சந்தித்தார்.தீட்சை கேட்டார்.அவர் காவியை கழற்றிவிட்டு ஒரு பச்சை ஆடையைத்தந்து அணியச்சொல்லி அவர்கள் மதவழக்கப்படி அறுவைசிகிச்சை செய்ய சொன்னார்.அதுவும் நடந்தது. நீண்ட காலம் அந்தக் காயம் சங்கரன் பிள்ளைக்கு ஆறவில்லை . ஏனென்றால் அதை ஒரு மருத்துவர் செய்யவில்லை. காட்டுப்பகுதி வேறு எனவே அவர்களுக்கு தெரிந்த விதத்தில் அதைச் செய்திருந்தார்கள் .

அந்த துறவி மொட்டையடிக்கப்பட்ட தலை கூடாதென்றும், முடி வளரவேண்டும் என்றும் சொன்னார்.தலைமுடி மட்டுமல்ல,தாடியும் வளரவேண்டும் என்று சொன்னார் எனவே சங்கரன் பிள்ளை அதை வளர்க்க துவங்கினார்.அங்கே ஒரு மாதம் இருந்தார்.அவருக்கு மன நிறைவு வரவில்லை.

அதையும் விட்டு விட்டு கன்பத் என்கிற துறவு முறைக்கு சென்றார்.மிகவும் புகழ்பெற்ற ஒருமுறை .கோரக் நாத் வகையை சேர்ந்தவர்கள் வலது காதில் ஒரு வளையலை அணிவது போல கன்பத் இனத்தை சேர்ந்தவர்கள் இடது காதில் அணிவது வழக்கம். எனவே இப்போது இடது காதில் ஒரு பெரிய ஓட்டையை போட்டு அதில் ஒரு பெரிய வளையலையும் மாட்டி விட்டார்கள்.

இப்படியே தொடர்கின்றது .உங்களுக்கு புரியும் . இது எங்கே போகும் என்று ???

ஒரு மனிதர் உண்மையான தேடுதலில் இருந்திருந்தால் இது அவனுக்கு நடந்திருக்காது .அவர் எதையும் தேடிப்போக வேண்டியதில்லை, அது உங்களை தேடி வரும்......

நாமும் சங்கரன் பிள்ளையை போலத்தான் தேடிக்கொண்டிருக்கின்றோம்.......
என்ன தேடுகின்றோம் என நாமே அறியாது .....

Sunday 2 August 2009

மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!


A Royal Salute To The Great Scientist Mayilswamy Annadurai..........

கோவை அருகில் அமைந்துள்ள
கோதவாடி எனும் கிராமத்தை சேர்ந்தவரும்,
எங்கள் உறவினரும்,
சந்திராயன் விண்கலத்தின் திட்ட குழு தலைவருமான

திரு.மயில்சாமி அண்ணாதுரை
(chandrayan project director) அவர்களுக்கு

டாக்டர் பட்டம் அளித்து கெளரவித்த
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எங்கள் நன்றிகள்.....

கடந்த சனிக்கழமை அன்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் பர்னாலா அவர்களால் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் குடும்பத்தினர் சார்பாகவும் வலையுலகத்தின் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்!!!!

Monday 20 April 2009

தமிழர்க்கு மனமே செத்துவிட்டதா???
மனித வர்கத்தின் மாபெரும் பேரழிவு
மகிந்தாவின் தலைமையில்
மகிழ்ச்சியோ பலருக்கு

காந்தி தேசமே இவர்களுக்கு
காவல்காரனாய்

வன்னியில் வாழ்வினை இழந்தோர்
வாழ்கையே தீயில் இழந்தோர் இவர்களை
வாயை மூடிக்கொண்டு பார்க்கும்
வக்கற்றோர் நாங்கள்

வேடிக்கை பார்க்கும்
வேங்கைகள் இங்கு எங்கள்
வேதனை தீர்க்குமா
வேதங்கள் நான்கு

தமிழனாய் பிறந்ததுக்கு
தலை இன்றி பலர்
தமிழச்சியின் வயிற்றில்
சூல்கொண்டதால் சிதைக்கப்படும்
எங்கள் கண்மணிகள் சிலர்

போரை நிறுத்துங்கள்
போரை நிறுத்துங்கள்
ஜனிக்கட்டும் தமிழீழ குருத்துக்கள்
ஒட்டாய் அழித்துகொள்ளலாம்

வெற்றி முழக்கமிடும் சிங்களவம் அங்கே
வெறி கிளம்புது எங்களிடம் இங்கே
மனிதமே மனிதம் இற்றுவிட்டதா
இல்லை மனிதப் பற்று விட்டதா
தமிழர்க்கு மனமே செத்துவிட்டதா???

Monday 23 March 2009

வல்லமை தாராயோ !!!!

அகதியாய் அலைந்து உயிர் பிழைக்கவும்
பதுங்கு குழியில் பதுங்கிடவும்

நண்பர்களின் சடலங்களை நாய் நரிகள்
பங்கிடுவதை பார்த்திடவும்

மழலைகளின் மரணங்களை கண்டு
மனம் தளராதிருக்கவும்

கற்பு நெறிகள் கயவர்களால்
காற்றில் கரைவதைகண்டும்

செம்புனல் கண்டு சிதறாமலும்
வன்கொடுமை கண்டு வளையாமலும்

இருக்க வல்லமை தாராயோ!!!!!!!!

Tuesday 17 March 2009

நிறுத்துங்கள் தோழர்களே

உதித்திடும் செங்கதிரோன் எங்கள்
உள்ளத்து துயர் துடைப்பான் என எண்ணினோம்

அருணனும் எங்கள் நிலை கண்டு அழுதிடும்
பரிதியும் எங்கள் நிலை கண்டு பதறிடும் என நம்பினோம்

ஆழி அழித்தது ஆள்பவனும் அழிக்கிறான்
அண்டைய நாடும் சேர்ந்து அழிக்கும்

ஆதரவு கேட்டால் அவரவர் உடலை தீயில் இடுகின்றனர்
இங்கு நாங்கள் எரிவது போதாதா?? அங்குமா எரிவ‌து???

போதும் சகோதரா நிறுத்து உன் தீக்குளிப்பை
இதுவல்ல நாங்கள் உம்மிடம் கேட்பது

Tuesday 10 March 2009

யுத்த பூமி

பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந்து
இறப்பதும் வையத்து வாழ்வு
பிறப்பதே இறப்பதற்கு என்பது என்ன வாழ்வு

முழவொலி விழவொலி மென்சிறார் மழவொலி
பாட்டொலி உழவொலி இங்கு இல்லை
மறலி கண்டு கதறிய மரணஒலி மட்டும் இஙகு உண்டு

புத்தனின் வழியில் வந்தவன் எங்கள் ரத்ததில் குளிக்கிறான்
இங்கு நதிகள் எங்கள் உதிரத்தால் சிகப்பானது
இங்கு மரங்களுக்கு எங்கள் பிணங்கள் உரமானது

இது யுத்த பூமி எங்கேடா சாமி????

Saturday 7 March 2009

கரியும் வைரமாகும்

கூழாங்கல் கரியை கண்டது
கர்வத்தில் சிரித்தது
கரி தன்னை பூமியில் புதைத்தது
காலத்தின் கோலம் கரிகட்டையாய் நாம்

பூமிக்குள் புதையும் என் இனம்
யுகங்கள் கழியும்
மண்ணில் புதைந்த மக்களும்
கரியும் வைரம் ஆகும்

இறைமை கரி கட்டையின் பொறுமைக்கு
அதை வைரம் ஆக்கும்
ஆனால் கூழாங்கலே
எங்கள் கால்களில் மிதி படத்தான் போகிறாய்

எம்மை கண்டு எள்ளி நகை ஆடும்
அனைவருக்கும் இது பொருந்தும்

Saturday 21 February 2009

தமிழ் இனம்

தமிழ் இனம் நம்பி கெட்ட இனம் !
வந்தாரை வாழ வைத்ததாக பீற்றிக் கொள்கிற இனம் தமிழ் இனம் !

52 ஆண்டுகளாக அன்பையும் அருளையும் சமாதானத்தையும்
நம்புகிற தமிழ் இனத்தை நசுக்கி, வன்முறை கொண்டு ஒடுக்கி,
ஒரு லட்சம் பேரை சாகடித்து இன்னும் அவர்களை நோகடித்து
வரும் சிங்கள பேரினவாத அரசிற்கு காந்தியை போதிக்கிற இந்தியா அரசு
ஆயுத்ங்களை அள்ளி கொடுக்கிறது, தங்களுடைய படைகளை அனுப்பி அங்கு
போரை நடத்துகிறது .

பல லட்சம் தமிழர்கள் வீடு வாசல் துறந்து அகதிகளாக உலகு எல்லாம் சுற்ற வைத்த இலங்கை படைகளுக்கு, பெண்களையும் குழந்தைகளையும் குருதியில் குளிக்க வைத்த இலங்கை அரசுக்கு இந்தியா 500 கோடி ரூபாய் கடனாக குடுத்து உள்ளது.

இந்த பணம் எங்கு இருந்து வந்தது ?
தமிழனின் உழைப்பிலும் வேர்வையிலும் ரத்திலும் குழைத்து எடுத்து குடுக்கிற
வரி பணம் அல்லவா?

ஈழ்ம்தில் இருந்து அகதிகளாக வந்த நம் மக்களை படு கேவலமாக நடத்தி ஆடு மாடுகளை போல அடைத்து வைத்து உள்ள கொடுமையை என்ன வென்று சொல்லுவது .

தமிழ் பெண்கள் இந்த போர்க்காலத்தில் பட்ட துன்பங்களை வரலாற்றில் எந்த இனமும் சந்தித்து இருக்காது.
40 பெண்களை ஒரு முறை சாலையில் கிடத்தி பீரங்கியால் உருட்டி நசுக்கி கொன்றது மறக்க முடியுமா.

செஞ்சோலை என்ற குழந்தைகள் காப்பகத்தில் குண்டு வீசி 61 குழந்தைகளை நொடியில் கருக்கியதே.

இப்பொழுது தினமும் நடை பெரும் வன்முறை வெறி ஆட்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியுமோ ?

2 லட்சம் மக்கள் கிளிநொச்சி யை காலி செய்து விட்டு காடுகளுக்குள் தஞ்சம் புகுந்து மழைக்கும் வெயிலுக்கும் மரங்களுக்கு அருகில் ஒதுங்கி காலத்தை
கடத்தி வருகின்றனர்.

இந்தியா உதவியோடு நாம் மீண்டு விடுவோம் , விடுதலை பெறுவோம் என்று எல்லாம் எண்ணி கொண்டு இருக்கும் ஈழ மக்களுக்கு நாம் அதிர்ச்சி அல்லவா
குடுத்து கொண்டு இருக்கின்றோம் நமது படைகளை அங்கு அனுப்பி

மாண்ட தமிழரின் கனவு பலிக்கட்டும் !
எங்கள் நாடு நாளை பிறக்கட்டும் !!

Saturday 14 February 2009

சோனியாகாந்தி

தங்களை பற்றி மிக்க பெருமையுடன் இருந்தோம்
ஒரு பெண் ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில்
இருப்பதை கண்டு
ஆனால் நீங்கள் இன்று இத்தனை தமிழர்கள்
கொல்லபடுவதை வேடிக்கை பார்த்து கொண்டு
அமைதி காப்பது சரியா ?????
இதற்கு தானா உங்களை தேர்ந்து எடுத்தோம் அம்மையாரே ?
இதற்கு இந்தியா உதவி செய்வது உங்கள் அனுமதியோடு
என்பது அனைவருக்கும் தெரியும்.
அங்கு இறப்பது புலிகள் மட்டும் அல்ல கிளிகளும்
எங்கள் இனத்தின் சின்ன சின்ன கிளிகள் அம்மா
முத்துகுமரனோடு முடியவில்லை உயிர் தீ இன் வேள்வி
தொடரும்மா இந்த சோகம் ?????
உங்கள் அனுமதியோடு
முற்று புள்ளி வைக்க வேண்டுகிறோம்....