Monday 23 March, 2009

வல்லமை தாராயோ !!!!

அகதியாய் அலைந்து உயிர் பிழைக்கவும்
பதுங்கு குழியில் பதுங்கிடவும்

நண்பர்களின் சடலங்களை நாய் நரிகள்
பங்கிடுவதை பார்த்திடவும்

மழலைகளின் மரணங்களை கண்டு
மனம் தளராதிருக்கவும்

கற்பு நெறிகள் கயவர்களால்
காற்றில் கரைவதைகண்டும்

செம்புனல் கண்டு சிதறாமலும்
வன்கொடுமை கண்டு வளையாமலும்

இருக்க வல்லமை தாராயோ!!!!!!!!

Tuesday 17 March, 2009

நிறுத்துங்கள் தோழர்களே

உதித்திடும் செங்கதிரோன் எங்கள்
உள்ளத்து துயர் துடைப்பான் என எண்ணினோம்

அருணனும் எங்கள் நிலை கண்டு அழுதிடும்
பரிதியும் எங்கள் நிலை கண்டு பதறிடும் என நம்பினோம்

ஆழி அழித்தது ஆள்பவனும் அழிக்கிறான்
அண்டைய நாடும் சேர்ந்து அழிக்கும்

ஆதரவு கேட்டால் அவரவர் உடலை தீயில் இடுகின்றனர்
இங்கு நாங்கள் எரிவது போதாதா?? அங்குமா எரிவ‌து???

போதும் சகோதரா நிறுத்து உன் தீக்குளிப்பை
இதுவல்ல நாங்கள் உம்மிடம் கேட்பது

Tuesday 10 March, 2009

யுத்த பூமி

பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந்து
இறப்பதும் வையத்து வாழ்வு
பிறப்பதே இறப்பதற்கு என்பது என்ன வாழ்வு

முழவொலி விழவொலி மென்சிறார் மழவொலி
பாட்டொலி உழவொலி இங்கு இல்லை
மறலி கண்டு கதறிய மரணஒலி மட்டும் இஙகு உண்டு

புத்தனின் வழியில் வந்தவன் எங்கள் ரத்ததில் குளிக்கிறான்
இங்கு நதிகள் எங்கள் உதிரத்தால் சிகப்பானது
இங்கு மரங்களுக்கு எங்கள் பிணங்கள் உரமானது

இது யுத்த பூமி எங்கேடா சாமி????

Saturday 7 March, 2009

கரியும் வைரமாகும்

கூழாங்கல் கரியை கண்டது
கர்வத்தில் சிரித்தது
கரி தன்னை பூமியில் புதைத்தது
காலத்தின் கோலம் கரிகட்டையாய் நாம்

பூமிக்குள் புதையும் என் இனம்
யுகங்கள் கழியும்
மண்ணில் புதைந்த மக்களும்
கரியும் வைரம் ஆகும்

இறைமை கரி கட்டையின் பொறுமைக்கு
அதை வைரம் ஆக்கும்
ஆனால் கூழாங்கலே
எங்கள் கால்களில் மிதி படத்தான் போகிறாய்

எம்மை கண்டு எள்ளி நகை ஆடும்
அனைவருக்கும் இது பொருந்தும்