”பயமெனும் பேய்தனை அடித்தோம்
பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்”
என்று வீர முழக்கமிடுகிறார் பாரதி
பயம் சில குடும்பங்களில் தாய் தரும் நோய் என்று சில மன நூலார் கூறுகின்றனர்.
இருட்டில் போகாதே அதைச்செய்யாதே இதைத் தொடாதே என எதற்கெடுத்தாலும் பயந்து தன் குழந்தைக்கு பாலுடன் பயத்தையும் ஊட்டுகிறாள் என்கிறார்கள்.
பணிந்துபோவது நல்லது தான்.
ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு.
இப்பொழுது நாம்
அதிகாரத்தை கண்டு அஞ்சுகிறோம்,
ஆணவத்திற்கு தலை பணிகிறோம்.
மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கவும் தயங்குகின்றனர் படித்தவர்கள். பயம் பல நிலைகளில் மக்களிடம் காணப்படுகின்றது.
நமது பணிவு என்ற பண்பு, மறுகோடிக்குச் சென்று மனிதனைக் கோழையாய்,பேடியாய் மாற்றிவிட்டிருப்பதைக் காண முடிகின்றது.பாரதியும் அதை தான் கூறினார். நம்மிடை நைச்சிய மனோபாவம் மிகுந்திருப்பதாக, அடிமைப் புத்தி மலிந்திருப்பதாக.
தன்னம்பிக்கை இழந்து விட்ட ஒரு சமுதாயத்தை, தன்னை தாழ்த்திக் கொண்டு வாழும் ஒரு மக்கள் கூட்டத்தை ,பிறரை இரந்து வாழும் ஒரு மன நிலையை கொண்ட ஒரு மக்கள் சமூகததை நாம் இன்று கொண்டு உள்ளோம்.இந்த நிலை மாற வேண்டும்.
நம்மால் முடியமா??? என்ற சந்தேகம்
நம்மால் முடியாது என்ற
நம்பிக்கையாய் ஊறி
நமது தாழ்வு மனப்பான்மையாய் வெளிவருகின்றது.
நமக்கேற்படும் பயத்தினால்,
நாம் பிறரை சார்ந்து நிற்க விரும்புகின்றோம்.
பிறரிடம் நமது பொறுப்புகளை ஒப்புவிப்பதன் மூலம்
நமது பிரச்னைகளிலிருந்து அவற்றை சமாளிப்பதிலிருந்து தப்பிக்க பார்க்கின்றோம்
கடல் பூராவும் தண்ணீர் இருந்தாலும், கடல் நீர் கப்பலுக்குள் புகாதவரை, கப்பல் அமிழ்ந்து போவது இல்லை. அதேபோல தான் பயமும்.மனம் என்ற கப்பலுக்குள் சஞ்சலம்,பயம்,திகில்,பீதி,சந்தேகம் என்ற ஓட்டைகள் ஏற்படாதவரை இந்த உலகப் பிரச்னைகளும் நம்மை அசைக்க முடியாது.
